Friday, October 16, 2009

தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்

நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்றதற்காக நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்றால்...நாம் வருடத்தின் அனைத்து நாட்கள் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.

புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன், ஹம்சன், ராவணன், இடும்பன், பகவன், ஹிரன்யச்சதா, அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இறைவனால் கொல்லப்பட்டவர்களே அல்லது அழிக்கப்பட்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அழிக்கப்பட்ட நாட்களிலும் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் அல்லவா?. ஆனால் இல்லையே ?. -

உண்மையில் தீபாவளி என்றால் என்ன, ஏன் கொண்டாடுகிறோம் ?.
நரகாசுரனை அழித்து விட்டதால் மட்டும் நம் வாழ்வில் ஒரு ஒளி பிறந்துவிட்டதா?. தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் துளியும் சம்பந்தமில்லை. நரகாசுரன் வெறும் கதை மட்டுமே. வரலாறு அல்ல.

நமது மனதில், எண்ணங்களில், சிந்தனைகளில், பேச்சுக்களில், பார்வைகளில், செயல்களில் அசுரன் இன்னமும் குடி கொண்டிருக்கிறானே.வறுமையிலும், பசியிலும், பட்டினியிலும், சுகவீனங்களிலும், துக்கங்களிலும், துயரத்திலும் நம்மை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறானே.

கோபம், பொறாமை, அழுக்கு, புகைப்பது, குடிப்பது, ஆபாசப் பேச்சுகள், பார்வைகள், வக்கிர புத்திகள், ஏமாற்றுவது, புறங்க்கூருவது, பாலியல் வக்கிரமங்கள், சுய நலம், திருட்டு, வரதட்சணை இன்னும் பல நம்மில் ஒழிந்து கொண்டு குடியிருக்கும் அசுரனின் செயல்பாடுகள் அல்லவா ?.

ஒரு அறையின் இருட்டை போக்க எப்படி வெளிச்சம் தேவை படுகிறதோ, அது போல், நம்மில் இருக்கும் இருட்டு என்ற அசுரனை ஒழிக்க, அழிக்க 'ஞான ஒளி' 'அறிவு ஒளி' 'உண்மை ஒளி' என்ற வெளிச்சம் தேவை படுகிறது. அறையில் இருக்கும் இருட்டை போக்க தீபத்திலான விளக்கின் மூலம் வெளிச்சம் வந்தது. இந்த தீபத்தினால் ஒளியைப் போல நம்மில் இருக்கும் இருட்டை போக்க வேண்டும் என்று உவமையாகக் கூறப் பட்டது. 'தீப ஒளி' என்றும் அழைக்கப்பட்டது.

'தீப ஒளி' என்பதே காலப்போக்கில், பேச்சு வழக்கில் 'தீபாவளி' என்றானது. நம் மனதில் இருக்கும்அந்த வெளிச்சம் கடவுளைக் குறிக்கின்றது என்று அகஸ்தியர், தாயுமானவர், மற்றும் எண்ணற்ற சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். கல்லும் மண்ணும் வெறும் கல்லும் மண்ணும்தான் என்று கூறியிருக்கின்றனர்.

அக்காலத்தில் அடக்கு முறை அதிகாரங்களையும், ஆணவங்களையும், நாங்கள் சொல்வதுதான் நீதி, உண்மை என்று உரைத்துக் கொண்டிருந்த பிராமணர்கள் அதயெல்லாம் மறைத்து கல்லையும் மண்ணையும் வழிபடச் செய்து தீபாவளியைக் கொண்டாடும்படி வற்புறுத்தினர், வரலாற்றினை மாற்றி எழுதினர்.அமைத்தனர். இவையெல்லாம் 1000 வருடத்திற்கு முன்புதான் நடந்திருக்க வேண்டும். எனென்றால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளி என்றொரு பண்டிகையைப் பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.

ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்த்துவம் முதலான அனைத்து மதங்களும், மதங்களுக்குரிய வேதங்களிலும் 'ஒளி - வெளிச்சம்' என்பது கடவுளைக் குறிக்கும் என்றே சொல்கிறது. கடவுளுக்கு கல்லாலும், மண்ணாலும் செய்த உருவம் ஏதும் கிடையாது, அவையாவும் கல்லும் மண்ணும் மட்டுமே என்றும் கூறுகிறது.

ஆனால் பிராமணர்களால் இந்த உண்மை மறைக்கப்பட்டது.அக்காலத்தில் இஸ்லாம் மதமும், கிறிஸ்த்துவ மதமும் நம் நாட்டில் இல்லை. இருந்திருந்தால் நம் மக்களுக்கு உண்மைகள் தெரிந்திருக்கும். தீபாவளி மட்டுமல்ல, இன்னும் பல பண்டிகைகள் கொண்டாடியிருக்க மாட்டோம். உண்மையில் தமிழர்களின் திருவிழா என்றால் பொங்கல் மட்டுமே. ஆனால் காலப் போக்கில் எல்லாம் மாறி இன்று பொங்கலை விட வெகு சிறப்பாய் கொண்டாடுவது தீபாவளியைத் தான்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீபாவளி தமிழ்நாட்டில் இல்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம்வரையில் இருந்ததில்லை. இது வரலாறு.

உலகின் முடிவு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஓரளவாது உண்மையுடன் இருக்க முயற்சிப்போம்.

புத்தாடை, வண்ணமயமான வான வேடிக்கை வெடிகள், பலவகையான பலகாரங்களுக்கு செலவழிப்பதில் ஒரு சதவீதம் ஏழை எளியோருக்கு, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் யாரேனும் ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்தால் மனித நேயம் மலரும், அவர்களது வாழ்க்கையில் ஒரு ஒளி பிறக்கும்.
தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர்.

கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர்.

செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர்.

ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தையும், உடலையும் பார்த்து பலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணையுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர்களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.
அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவிடர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு உதவிய துரோகிகளை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவிடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித்துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

நன்றி: sasi kumar

Sunday, October 11, 2009

ஆட்டுக்குட்டியின் அலரல்

வன்னியில் போர் தீவிர்மடைந்த வேளை, 2008 செப்ரம்பரில் ஒரு நாள் நண்பகல் 12.00 அளவில் ஏ9 வீதியால் பரந்தனில் இருந்து கச்சேரி நோக்கி மோட்டர் சைக்கிலில் தனியாக வந்து கொண்டிருந்தேன். கந்தசாமி கோவிலுக்கு முன்னால் உள்ள வீதியில் கிட்ட தட்ட நான்கு தொடக்கம் ஆறு மாதம் மதிக்க தக்க ஓர் ஆட்டுக்குட்டி தன்னம் தனியாக மிகவும் சத்தமாக ஆவலக்குரல் ஏழுப்பியவாறு எனக்கு முன்னால் வீதியின் நடுவில் ஒடிக்கொண்டிருந்தது.

ஒரு கனம் எனது அனைத்து இயங்கு நிலையும் செயலிழந்து போனது. ஆட்டுக்குட்டி கத்தியது எனக்கு எனது மகன் கத்தி ஓடுவது போல இருந்தது.

தாயை தந்தை இழந்து ஒரு குழந்தை எப்படி கத்தி அழுமோ அத்தகைய தோற்றத்தினை ஏற்பத்தியது ஆட்டுக்குட்டியின் கத்தல்.

திவிரமடைய இருந்த போரின் குணங்கள் அனைத்தினையும் அந்த சம்பவம் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்தின.

இந்த போர் திவிரமடைகின்றது. நாளும் ஏறிகளை வீச்சு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பலர் உயிர் இழக்கின்றார்கள் எங்களின் கண் முன். நாளை இந்த போரில் நானோ எனது மனைவியோ அல்லது இருவருமே மடிவோமாக இருந்தல் எமது சிறிய குழந்தைகளின் அலரலும் இப்படித்தான் இருக்கும் என எனது மனம் கற்பனை செய்து கொண்டது. அந்த ஆட்டுக்குட்டியின் அலரல் சத்தம் இன்னும் எனது காதில் ஒலித்து;கொண்டுதான் இருக்கின்றது.

இன்று போர் முடிந்துள்ளது அல்லது ஓய்வுக்கு வந்துள்ளது. ஆனால் பெற்றோரை இழந்த பல நூறு குழந்தைகளின் அவலக்குரல் மட்டும் இன்னும் நிற்க்கவில்லை.

Friday, September 25, 2009

அன்னை மண்ணை அவனும் பிரிந்தான்..!!!


2006.09.25 திங்கட்கிழமை...அன்றைய அவன் பொழுதும் அமைதியாகத்தான் விடிந்தது. வழமைபோல காலையில் பரபரப்பு இல்லை. காரணம் அந்த பொழுதுகள் எல்லாம் யுத்தம் தொடங்கி யாழ்ப்பாணம் சல்லடையாக்கப் பட்டு கொண்டு இருந்த காலம். ஆனால் அன்று இவன் சற்று சிக்கீரமாகவே எழுந்து குளித்து விட்டு அவனது அப்பா வாங்கி வர இருக்கும் ‘உதயன்’ மற்றும் ‘தினக்குரல்’ பத்திரிகைகளுக்காக காத்து இருந்தான். அதில் இன்று கப்பல் புறப்படும் என்ற செய்தியை தேடினான். எங்கும் இல்லை. அப்போது இவனின் நண்பன் வந்தான். அவன் ஒரு மருத்துவன். அவன் சொன்னான். ‘மச்சான் இண்டைக்கு கப்பல் போகுது, நீயும் வாற எண்டால் வா’ என அழைத்தான். இன்றும் அந்தக் கப்பல் பயணத்துக்கென அவன் புறப்பட்டால் அது அவனுடைய 10 வது முயற்சியாக இருக்கும். இதுவரை 9 தடவைகள் முயன்று முயன்று தோற்ற களைப்பு அவனை சோர்வடையச் செய்தது. நண்பன் உறுதி படத்தெரிவித்தான் கப்பல் புறப்படுவதாக. இவனும் புறப்பட தீர்மானித்தான்.

பயணப் பொதியுடன் யாழ்.புகையிரத நிலையம் நோக்கி விரைந்தான். அங்கு ஏராளமான பயணிகள். எப்படி வந்தார்கள் என்று அவனுக்கு வியப்பு. இம்முறை அவன் புதிதாக உத்தியோகத்தர்களுக்கான நிரையில் நின்றான். இதுவரை கப்பல் பயணம் அவனுக்கு அளித்த ஏமாற்றங்கள் , இந்தமுறையும் அவனை நம்பிக்கை இழக்கவே செய்துவிட்டது. இருந்து சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல முயன்றான். அவனது நிரையில் நின்றவர்களை உள்ளே எடுக்கத்தொடங்கி விட்டார்கள். இவனது முறை வந்தது. இதுவரையில் அவனைத் தடுத்து நிறுத்திவந்த இராணுவ மேலதிகாரிகளில் ஒருவரிடமே இம்முறையும் மாட்டிக் கொண்டான். அவர் எங்கே போவதாக சிங்களத்தில் கேட்க இவன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கண்டி என்று பதிலளித்தான். ஏன் என்று கேட்க மேற்படிப்புக்காக பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற ஒரு கடிதத்தை காட்டினான். இம்முறை அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். துன்பம் என்னவென்றால் இதே கடிதத்தை பல முறை காட்டிய போது அவர்கள் அவனுக்கு சொன்ன பதில் இது புகைப்படப் பிரதி உன்னை எப்படி நம்புவது என்று கேட்டார்கள். இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது போல உனர்வு. அதுவும் பிரபல பேராதனைப் பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதம். என்ன செய்வது எல்லாம் அங்க பிறந்த குற்றம் என்று மனதுக்குள் நினைத்து தன்னை தேற்றி கொண்டு முன்னே நடந்தான். நான்கு பிரதான கொட்டில்கள். ஒவ்வொன்றிலும் வரிசையாக நின்று நின்று முன்னே போக வேண்டும். இப்படி நத்தை போல நகர்ந்து நகர்ந்து இரண்டாவது கொட்டிலுக்கு விரைந்தான். அங்கே பயண அனுமதிப் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சகல விபரங்கள், அலைபேசி இலக்கம், எங்கே போகிறான், ஏன், யாருடன் தங்க போகிறான், இப்படி பல விடயங்கள். எல்லாம் அறிந்து படிவம் ஏற்றுக்கொள்ளப் பட்ட உடன் அடுத்த கொட்டில் இராணுவ புலனாய்வுத் துறையினரது. அவர்கள் எல்லோரையும் வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களோடு சில தமிழ்க் குழுக்களும் இருந்தது அவனை கடுப்பாக்கியது. அதிலும் அவர்களது கேள்விகள் அவனை சினத்துக்குள்ளாக்கின.

எல்லாம் விதி என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் முகத்தை கொடுத்தான். அவர்களும் அவனைப் போட்டு துளைத்தெடுத்தனர். அந்த பெரிய தடையை தாண்டி அவன் அடுத்த கொட்டிலுக்குள் நகர்ந்தான். அதில் நின்று பார்க்கும் போது அருகே ஓ.எல்.ஆர் சேர்ச் மாதா கோவில் ஒன்று இருந்தது. அவளிடம் இறைஞ்சினான் இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே என.....! அவளும் எம்மைப் போல் ஏதும் செய்ய முடியா நிலையோ என பேரூந்துக்குள் ஏறினான். எல்லோர் முகங்களிலும் ஏதோ ஒரு மகிழ்ச்சி. அவன் மட்டும் அசையவில்லை. ஏனெனில் இதற்கு முன்னர் போனவர்களில் பலபேர் காங்கேசன்துறையில் வைத்து இடம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவன் பொறுமையாக இருந்தான். இதயம் முழுவது குலதெய்வம் நாமம் இரகசியமாக ஒலித்த வண்ணமே இருந்தது. 6 பேருந்துகள் தொடராக பயணித்தது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை நோக்கி. காலையில் இருந்து எதுவும் இல்லை. வயிறு வாட்டத்தொடங்கியது.

1200 பயணிகள் வரும் வரை யூனியன் கல்லூரிதான். இரவு முழுவதும் அங்கே தங்க வேண்டும். அடுத்தநாள் தான் பயணம். வந்திறங்கியவுடன் மீண்டும் ஒரு பதிவு. அதிலே ஒரு கொடுமை என்னவென்றால், கடலில் பயணம் செய்யும் போது தமக்கு ஏதாவது நடந்தால் தாமே பொறுப்பு என ஒப்பமிட வேண்டும். நமது நாடாம். நமது கடலாம். ஆனால் நாம் போகும் போது எமக்கு ஏதும் நடந்தால் நாமே பொறுப்பு என்ற கையொப்பம். அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். என்னடா இழவு இது. எங்காவது இப்படி இருக்குதா? எல்லாம் போகட்டும். இதுதான் காலம். இரவு ரொட்டியும் பிளேன் ரீயும் தான் உணவு. கண்டபடி உண்ணவும் பயமாக இருந்தது அவனுக்கு. காரணம் மலசல கூட வசதிகள். 1200 பேர் , 6 மலசல கூடம் பெண்களுக்கும் சேர்த்து. இதுதான் தமிழ் மக்களை கவனிக்கும் பண்பு. எம்மவர்களோ இதற்குள்ளும் லக்ஸ் போட்டு குளிப்பது...சிக்னல் போட்டு பல் துலக்குவது என எந்த சலனமும் இல்லாமலும் இருந்தனர். அவனுக்கு இவைகள் மனதிற்குள் சிரிப்பைத்தந்தன. தன்னுடன் வந்த நண்பர்களுடன் சற்று நேரம் கதைத்து விட்டு ஓரமாக கிடந்த ஒரு வாங்கில் படுக்கத்தயாரானான். தீடிரென காதைப்பிளக்கும் சத்தத்துடன் வெடிகுண்டுச்சத்தம். திகைத்து போனான். அவனுக்கு தெரியும் அது யுத்தம் தீவிரமான காலம். ஆனால் அந்த் ‘ஆட்டிலறி’ அடிகளின் ஓசையில் பல குழந்தைகள் வீரிட்டு அழுதன. என்னால் மட்டும் என்ன எவராலும் எதுவும் செய்ய முடியாது என பொருமி விழித்திருந்தான்.

அடுத்தநாள் விடியலுடன் பேரூந்துகளில் பயணிகள் அடைக்கப்பட்டு துறை முகத்தை நோக்கி நகர்ந்தனர். பேரூந்துகளின் பக்கம் எல்லாம் கறுப்பு மெழுகு சீலைகளால் அடைக்கப்பட்டு இருந்தது. காரணம் அது உயர்பாதுகாப்பு வலயம். எவரும் எதையும் பார்க்க கூடாது என்பதற்காக. எல்லாம் எமது விதி என எண்ணி புறப்பட்டான். இன்னமும் அவன் மனது சமாதானம் அடையவில்லை. தனக்கு இன்று கூட கப்பலில் ஏற வாய்ப்பு கிடைக்குமா என எண்ணினான். பேரூந்தால் இறங்கிய உடன் மீண்டும் ஒரு சோதனையும் பதிவும். தமிழன் என்றாலே பதிவு சோதனையும் கலந்த வாழ்வுதானா என்றாகி விட்டது. அலைபேசியை ‘சிம் கார்ட்’ வேறாகவும் ‘பற்றறி’ வேறாகவும் பிரித்து வைக்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவை ஏற்று செய்தான். எல்லாம் பிரித்து மேய்ந்தார்கள். தன்னை அனுமதித்துவிட்டார்கள் என்றதும் கொஞ்சம் சந்தோஷப்பட்டவன், கப்பலில் இடம் இல்லை என்று தன்னை திருப்பி அனுப்புவார்களோ என்று மனதிற்குள் பயந்தான். காலை 7.30 மணியளவில் இருந்து காத்திருக்க தொடங்கினான். அனல் பறக்கும் வெய்யில். வெட்ட வெளி. பெண்கள் குழந்தைகளை ஒரு தகர கொட்டகைக்குள் இருக்க அனுமதித்தனர். குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. கொண்டு சென்ற சாரம்(லுங்க்) தான் அவனுக்கு உதவியது குடையாக. அவனது பொதியில் எல்லாம் வெயிலில் உருகிய தாரின் அடையாளம். எவ்வளவை பொறுத்தோம். இதை பொறுக்கமாட்டோமா. தண்ணீரை கூட தராமல் காத்திருக்க வைக்கப்பட்டோம். மதியம் 2.30 மணிக்குத்தான் அவர்களுக்கான கப்பல் கரையைத்தொட்டது. அதிலிருந்து வேக வேகமாக பயணிகள் இறக்கப்பட்டனர். அவர்களோடு சீருடையினரும் இறக்கப்படுவதை அவன் அவதானித்தான். இவர்களையும் ஏற்றத்தயாராகினர். பொதிகளைத் தூக்கிக் கொண்டு நிரையில் நின்று நடந்தான். இவர்களோடும் சீருடையினர் ஏற்றப்பட்டனர்.

4500 பேர் பயணிக்கும் கப்பல். 1200 பேர் பயணிகள். மிகுதிப்பேர் இவங்களா என வியந்தான்? எங்களை ஏற்றுகிறோம் என்ற பெயரில் அவங்கள் தங்களை அல்லவா ஏற்றுகிறார்கள். அவர்களை அனுப்ப வேண்டும். அதற்கு பாதுகாப்புக்கு நாம் தேவை போல..! எவரோடு இதைக் கதைக்க முடியும். மனதிற்குள் புழுங்கினான். கடலில் அவனுக்கு இப்படியான கப்பலில் புதிய பயணம். முன்னர் கிளாலி கடல்நீரேரியூடாக பலதடவைகள் சென்று வந்தாலும் இது அவனுக்கு புதியதே. ஆனால் இதையெல்லாம் அனுபவிக்கும் மனநிலையில் அவன் இல்லை. தனது தாய் மண்ணைப் பிரிகிறோம் என்ற கவலையே....! இனி எப்போது மீண்டும் கால் பதிப்பேன் என்ற ஏக்கமே...! கனத்த நெஞ்சத்தோடு நின்ற இவனையும் சேர்த்து சுமந்து கொண்டு கடலில் நின்ற கப்பல் புறப்பட்டது.

‘விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா...!’

மூன்று வருடங்கள் கடந்தும் இதே ஏக்கத்தோடும்...மனக்குமுறலோடும் அவன் இன்றும் இருக்கிறான்...என்றாவது அன்னை மண்ணில் அடி வைப்பேன் என்ற எண்ணத்தோடு...!!! காத்திருப்புத்தானே வாழ்க்கை.